நாமக்கல்லில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கஞ்சா மற்றும் மது ஊற்றி, மிருகத்தை போல் சித்ரவதை செய்த கணவர் உட்பட 3 பேரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.  

நாமக்கல்லை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் , நாமக்கல்லைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் குர்ஷாந்த் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 27-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது இளம்பெண்ணின் பெற்றோர் தங்க நகை மற்றும் பல லட்ச ரூபாய் ரொக்கம் வழங்கியுள்ளனர்.  

இந்நிலையில், திருமணமான மறுநாள் இரவிலேயே கணவர் குர்ஷாந்த் கஞ்சா போன்ற போதைப் பொருளைப் பயன்படுத்தி இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்துள்ளார். மேலும், கடந்த டிசம்பர் மாதம் மில்க் ஷேக்கில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மாமனார் பொன்னுசாமியிடம் முறையிட்டபோது, அவர் தனது மகனை தட்டி கேட்காமல், “கூடுதலாக தங்க நகை மற்றும் 10 லட்ச ரூபாய் வாங்கி வா” என்று கூறி மிரட்டியுள்ளார். இதற்கிடையில் பெண்ணின் பெற்றோர் 10 லட்ச ரூபாயை வங்கி கணக்கு மூலம் கொடுத்துள்ளனர். ஆனாலும் தங்க நகையை கேட்டு, கணவர் குர்ஷாந்த், மாமனார் பொன்னுசாமி மற்றும் கணவரின் சகோதரர் நிஷாந்த் ஆகியோர் பெண்ணை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.  

பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி இடம் புகார் அளித்தார். புகாரின் பேரில்  நாமக்கல் அனைத்து மகளிர் காவல்  நிலைய போலீசார் பெண்ணின்  கணவர் குர்ஷாந்த், மாமனார் பொன்னுசாமி, மைத்துனர் நிஷாந்த் ஆகிய 3 பேர் மீது  வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இளம்பெண்ணின் கணவர் குர்ஷாந்த், மாமனார் பொன்னுசாமி, மைத்துனர் நிஷாந்த் ஆகிய மூவரும் திடீரென தலைமறைவானர்கள். தலைமறைவாக உள்ள மூவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *