கோவை,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு மற்றும் கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் உரிமையாளர் நடராஜன் (70 ). இவரது நிறுவனத்திற்கு டிடிசிபி அனுமதி பெற்ற 2 ஏக்கர் நிலம் கோவை பட்டணம் பகுதியில் உள்ளது .கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜேஎம்ஜே ஹவுசிங் நிறுவனத்தினர் நடராஜனை அணுகி வீட்டு மனைகளில் கட்டிடம் கட்டி விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்தனர். இதை அடுத்து 31 சைட்டுகளை இருவரும் 50 சதவீதம் என ஒப்பந்தம் செய்தனர்.
அதன்படி 16 வீட்டு மனையில் வீடுகளை ஜேஎம்ஜே ஹவுசிங் யூனிட் நிறுவனத்தினர் கட்டி விற்பனை செய்து கொள்வது என்றும் அந்த வருமானத்தை உபயோகித்து 15 வீட்டு மனையில் வீடுகளை கட்டி நடராஜன் நிறுவனத்திற்கு கொடுப்பது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும் வீடு கட்டி மேற்கண்ட 16 மனை இடங்களை விற்பனை செய்வதற்கு பவர் ஏஜெண்டாக ஜேஎம்ஜே ஹவுசிங் யூனிட் உரிமையாளர் வில்சன் பி. தாமசை நிறுவன உரிமையாளர் நடராஜன் நியமித்திருந்தார். இதற்குரிய உள்ளாட்சி கட்டிட அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளையும் ஜே.எம்.ஜே நிறுவனத்தினர் பெறவேண்டும். ஆனால் ஒப்பந்தம் செய்து பல மாதங்கள் ஆகியும் அந்த மனை இடங்களில் எந்த உள்ளாட்சி கட்டிட அனுமதியும் பெறாமலும் வீடுகளும் கட்டப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடராஜன் ஆன்லைன் மூலம் தன்னுடைய நிலத்திற்குரிய வில்லங்கச் சான்றுகளை சரி பார்த்தார் . அப்போது நடராஜன் நிறுவனத்திற்கு சொந்தமான 16 மனை இடங்களில் 4 வீட்டு மனைகள் ஜேஎம்ஜே ஹவுசிங் நிறுவனத்தின் உரிமையாளர் வில்சன் தாமஸின் மனைவி ரெனி பேருக்கும், 3 வீட்டுமனைகள் நிறுவனத்தின் மேனேஜர் பார்த்திபன் பேருக்கும், 5 வீட்டுமனைகள் நிறுவனத்தின் இயக்குனர் சிஜோ பேருக்கும் ஒப்பந்தங்களை மீறி பதிவு செய்யப்பட்டு வில்சன் தாமஸ் தனக்கு தானே எடுத்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டு மனைகளை பொது மக்களுக்கு விற்காமல் மனைவி மற்றும் அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் பெயருக்கு மாற்றம் செய்த சொத்துக்களில் 6 மனை இடங்களை மறு விற்பனை செய்து அந்த இடத்தில் வீடு கட்டிக் கொண்டு இருக்கின்ற தகவலையும் அறிந்து நடராஜன் அதிர்ச்சி அடைந்தார் .அதேபோல 9 மனை இடங்களை அடமானம் வைத்து 1.5 கோடி ரூபாயை வில்சன் தாமஸ் பெற்று நிறுவன சொத்துக்களில் மேலும் வில்லங்கத்தை ஏற்படுத்தினார்.தொடர்ந்து இந்த மோசடி குறித்து ஆவணங்களை சரிபார்தார். அப்போது பவர் ஏஜென்டாக நியமித்திருந்த வின்சென்ட் தாமஸ் இடத்தின் உரிமையாளர் நடராஜனின் வாழ்வு சான்றிதழை நடராஜனுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் அனுமதி பெறாமல் அவரது கையெழுத்தை போலியாக போட்டு காரணம்பேட்டை பகுதியில் உள்ள டாக்டர் தனபாலன் என்பவரிடம் வாங்கியதாக போலியாக தயாரித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்ததும், ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனை செய்த போது அசல் ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்திருந்த பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்களின் துணையோடு இடங்களை போலியான முறையில் ஆவணங்களை தயாரித்து விற்பனை ஆவணம் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது .இதை தொடர்ந்து நடராஜன் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார் . புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் போலியாக மருத்துவ அதிகாரியின் கையெழுத்து மற்றும் சீல் வைத்து நடராஜனின் வாழ்வு சான்றிதழை போலியாக தயாரித்து 12 வீட்டு மனைகளை விற்றும் அடமானம் வைதும் சுமார் 8 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் ஜே.எம்.ஜே ஹவுஸிங் உரிமையாளர் வில்சன் தாமஸ், அவரது மனைவி ரெனி, நிறுவனத்தின் இயக்குனர் சிஜோ மற்றும் மேனேஜர் பார்த்திபன் ஆகிய நான்கு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . கோவையில் நிலங்களை வைத்திருப்பவர்களை குறிவைத்து ஜேஎம்ஜே ஹவுசிங் நிறுவனத்தினர் ஏராளமான மோசடிகள் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் இது போன்ற போலி நிறுவனத்தினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.