கோவை,
ரூ.75 கோடி மோசடி செய்ததாக 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் செல்வகுமார் (59). கோவையில் பிரபல ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை நிறுவன குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை பொன்னுச்சாமி மற்றும் சகோதரர்கள் ஐந்து பேருக்கு இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு இசைவு தீர்ப்பு ஏற்பட்டது. இதன் அடிப்படையில் பொன்னுச்சாமியின் மகன்கள் செல்வகுமார், சீனிவாசன், மகேஸ்வரன் ஆகியோருக்கு சொத்துக்கள் பிரித்து ஒதுக்கப்பட்டது. இதன்படி கோவை கிராஸ் கட் ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த ஆதித்யா ஆட்டோ மொபைல்ஸ் ,ஆதித்யா ஆட்டோ ஸ்டோர் ,ஆதித்யா குளோபல் டிரேடிங் உள்ளிட்ட நிறுவனங்கள் சொத்துக்களாக பிரிக்கப்பட்டது. கடந்த 2005 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் 11 கோடி ரூபாய் கடன் பெற்று நிறுவனத்தை பொன்னுச்சாமி மற்றும் அவரது மகன்கள் மற்றும் மருமகள்கள் இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்களாக இருந்து வந்தனர். நிறுவனத்தை பொன்னுச்சாமி நேரடியாக கவனித்து வந்தார்.கடந்த 1965 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த குடும்பத் தொழிலில் பொன்னுச்சாமியின் பங்காக 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது .இதையடுத்து 2004 ஆம் ஆண்டு செல்வகுமாரின் மனைவி கார்த்திகா மற்றும் செல்வ குமாரின் சகோதரர் சீனிவாசன் மனைவி பிரமிளா ஆகியோரை பங்குதாரர்களாக கொண்டு ஆதித்யா ஆட்டோ ஸ்டோர் என்ற நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் பொன்னுச்சாமியின் பங்காக அளிக்கப்பட்ட 40 லட்ச ரூபாய் மதிப்பிலான நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் மற்றும் கார்த்திகா மற்றும் பிரமிளா தரப்பில் இருந்து தலா 25 லட்ச ரூபாய் முதலீடு செய்து நிறுவனம் நடத்தப்பட்டு வந்தது. நிறுவனத்தை சீனிவாசன் மற்றும் பிரமிளா ஆகியோர் நடத்தி வந்துள்ளனர் .இந்நிலையில் கார்த்திகாவுக்கு தெரியாமல் வங்கி கணக்கு வழக்குகளை கனரா வங்கியில் இருந்து இன்டஸ் இன்ட் வங்கிக்கு மாற்றி உள்ளனர்.2015 ஆம் ஆண்டு கார்த்திகாவின் கையெழுத்துக்களை போலியாக போட்டு நிறுவனத்தின் பங்குதாரரில் இருந்து கார்த்திகாவை நீக்கி விட்டு இன்டஸ் இன்ட் வங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை சீனிவாசன் மற்றும் பிரமிளா ஆகியோர் எடுத்துள்ளனர். மேலும் ஆதித்யா நிறுவனத்தில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்களை அபகரித்து 2018 ஆம் ஆண்டு நஞ்சப்பா ரோட்டில் தனக்கோடி ஆதித்யா என்ற நிறுவனத்தை சீனிவாசன் உள்ளிட்டோர் துவக்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொன்னுச்சாமி இறந்து விட்டார் .இதை தொடர்ந்து சீனிவாசன் மற்றும் பிரமிளா உள்ளிட்ட ஆதித்யா ஆட்டோ ஸ்டோர்ஸ் என்ற பேரில் வரும் வரவு செலவுகளை மறைத்து போலியாக உருவாக்கிய வங்கி கணக்கு மூலம் 75 கோடி ரூபாய் அளவிற்கு சீனிவாசன் மற்றும் பிரமிளா உள்ளிட்டோர் மோசடி செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து செல்வகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பலமுறை சீனிவாசன் மற்றும் பிரமிளாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் சரிவர பதிலளிக்காமல் இருந்துள்ளனர். தொடர்ந்து செல்வகுமார் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார் .தொடர்ந்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர் .விசாரணையின் அடிப்படையில் சீனிவாசன் ,பிரமிளா, கோவை ராம்நகர் கனரா வங்கியின் அலுவலர், அவிநாசி ரோடு இண்டஸ் இன்ட் வங்கி கிளை அலுவலர் ஆகிய நான்கு பேர் மீது மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் போலி கையெழுத்து போட்டு 75 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.