கோவை கிராஸ் கட் ரோடு மேம்பாலம் அருகில் பவர் ஹவுஸ் எதிரில் கற்பகம் ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது .இந்த நிறுவனத்தை ராமதாஸ் கடந்த 2006 ஆம் ஆண்டு துவக்கினார். கற்பகம் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தை ராமதாஸின் மகன் பாலமுருகன் கவனித்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ராமதாஸ் இறந்தார். அவரது இறப்பிற்கு பின் அவர் விருப்பப்படி சொத்துக்களை பிரித்துக் கொள்ள பாலமுருகன் ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாக பாலமுருகன் மற்றும் அவரது இரண்டு இளைய சகோதரிகள் தாயார் ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. ராமதாஸ் இறந்த பிறகு ஒரு மாதத்திற்கு சொத்து பிரச்சனை காரணமாக கடை பூட்டப்பட்டு இருந்தது. ராமதாஸ் உயிருடன் இருக்கும் போது சகோதரியின் கணவர் ராமதாஸின் முதலீடு மற்றும் கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்தார் .அதேபோல ராமதாஸும் நம்பிக்கையுடன் மருமகனிடம் அனைத்து கணக்கு வழக்குகளையும் கொடுத்து வந்திருந்தார் . இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி கடையில் உள்ள இருப்பு விபரங்களை பார்த்த போது 38கிலோ742 கிராம் தங்கமும் 46கிலோ 635 கிராம் வெள்ளி பொருள்களும் இருந்தது .தொடர்ந்து குடும்பத்தாரிடைய பாகப்பிரிவினை பிரச்சனை சம்பந்தமான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த சமயத்தில் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலமுருகன் மற்ற பங்குதாரர்களுக்கு தெரியாமல் கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார் .இதைத் தொடர்ந்து சகோதரி கேள்வி எழுப்பிய போது சரியான பதில் அளிக்காமல் கடை மற்றும் அதில் உள்ள நகைகளை அபகரிக்கும் விதமாக பாலமுருகன் செயல்பட தொடங்கினார். இதைத் தொடர்ந்து இளைய சகோதரி 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2022 ஆம் ஆண்டு தாயாரையும் இளைய சகோதரியையும் கடையில் ரிசிவர்களாக நியமித்து கடையின் கணக்கு வழக்குகளை பராமரிக்க ஆடிட்டரை நியமித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் நான்கு மாதத்திற்கு ஒரு முறை கற்பகம் ஜுவல்லர்ஸ் கடையின் கணக்கு வழக்குகளை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கோர்ட்டு உத்தரவிட்டது .தொடர்ந்து சகோதரி கடையின் இருப்பு விபரங்களை சரிபார்த்த பொழுது 38கிலோ 742 கிராம் தங்கத்திற்கு பதிலாக 31கிலோ 739 கிராம் தங்கம் மட்டுமே இருப்பில் இருப்பதாக பாலமுருகன் கணக்கு காட்டி இருந்தார். மேலும் கடையில் இருந்த அக்கவுண்ட சாப்ட்வேர்கள் மற்றும் இருப்பில் இருந்த மற்றும் விற்பனை செய்த நகைகளுக்குரிய எல்லா விபரங்களையும் பாலமுருகன் மாற்றியிருந்தார் .அதேபோல 3கிலோ 473 கிராம் அளவுள்ள பழைய தங்க நகைகளையும் பாலமுருகன் எடுத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய சென்றபோது ஏற்கனவே இருந்த சிசிடிவி காட்சிகளை பாலமுருகன் உள்ளிட்டோர் அழித்துவிட்டனர். அதேபோல ராமதாஸ் உயிருடன் இருக்கும் போது சுமார் 7 கோடி ரூபாய்க்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து இருந்த பணத்தை தாயாரின் வங்கி கணக்கிலிருந்து பாலமுருகன் தனது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டார் . இந்த விவரங்களை தகுந்த ஆதாரங்களுடன் சகோதரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். நீதிமன்றம் பாலமுருகன் மோசடியாக கையாடல் செய்த 7 கோடி ரூபாய் பணத்தை ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால் பாலமுருகன் நீதிமன்ற உத்தரவினை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனைத் தொடர்ந்து பொய் கணக்கு மூலம் 7 கோடி ரூபாய் மதிப்பிலான 10கிலோ 476 கிராம் அளவுள்ள தங்க நகைகளையும் 7 கோடி ரூபாய் முதலீட்டு பணத்தையும் அபகரித்துக் கொண்டதாகவும் பாலமுருகனின் சகோதரி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலீசார் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாலமுருகனுக்கு சம்மன் அனுப்பினர். சம்மனை பெற்றுக் கொண்ட பாலமுருகன் விசாரணைக்கு ஆஜராகாமல் கோவையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து துபாய்க்கு தப்பி சென்று விட்டார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் பாலமுருகன் பாஸ்போர்ட் உள்ளிட்ட விபரங்களை விமான நிலையங்களுக்கு அனுப்பி உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலமுருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பாலமுருகனின் தந்தை ராமதாஸ் இறந்த பிறகு அவரது டிஜிட்டல் கையெழுத்துக்களை போலியான முறையில் பயன்படுத்தி ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்து மோசடி செய்துள்ளார் .அதேபோல ராமதாஸின் டிஜிட்டல் கையெழுத்துக்களை வைத்து பழைய ஜிஎஸ்டி எண்களையும் ரத்து செய்து மோசடி செய்ததாக கடந்த ஆண்டு மாநகர குற்றப்பிரிவு போலீசார் பாலமுருகன் மற்றும் அவரது ஆடிட்டர் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் பங்குதாரர்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த நகை கடை அதிபர் தற்போது தலைமறைவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .