கோவை,
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அறுவடை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு அறுவடை விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிஎஸ்ஐ தேவாலயத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தோடு பங்கேற்பதற்காக வந்திருந்தனர். அந்த சமயத்தில் சிஎஸ்ஐ திருச்சபையின் நிர்வாகிகள் என்று கூறிகொண்டு சிலர் அடியாட்களுடன் அங்கு நுழைந்து அறுவடை விழாவை நடத்தக்கூடாது என தகராறு செய்தனர். மேலும் விழாவிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு இருந்த பொருட்கள் டேபிள்கள் மற்றும் அனைத்து பொருட்களையும் அடித்து உதைத்து சேதப்படுத்தினர். மேலும் அங்கு இருந்த அறுவடை விழாவை நடத்திக் கொண்டிருந்தவர்களை தகாத வார்த்தைகள் பேசியதோடு அவர்களை தாக்க முயன்றனர். இதை பார்த்த தேவாலயத்துக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தங்கள் குடும்பத்தாரோடு அலறி அடித்தபடி வெளியே ஓடி உள்ளனர் .இந்த சமயத்தில் அறுவடை விழாவிற்காக பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய பத்து லட்ச ரூபாய் பணம் மற்றும் பொதுமக்கள் காணிக்கையாக கொடுத்திருந்த தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றை தகராறில் ஈடுபட்டவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தேவாலயத்தின் மூத்த உறுப்பினரும் தொழிலதிபருமான பிரபு டேனியல் என்பவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார் .புகாரில், தேவாலயம் என்பது அனைத்து தரப்பு மக்களும் தங்களது பிரார்த்தனைகளை செய்வதற்கான ஒரு இடமாகும் . தேவாலயத்தை ஒரு சிலர் வேண்டுமென்று கடந்த சில மாதங்களாக பூட்டி வைத்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் இருந்து வருகின்றனர் .மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டுதோறும் நடத்தும் அறுவடை விழாவை அங்கு நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் சிலர் அடியாட்களுடன் வந்து வன்முறையில் ஈடுபட்டனர் .எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர் .தொடர்ந்து அறுவடை விழாவின் போது தகராறில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்தி பணம் மற்றும் தங்க நாணயங்களை திருடி சென்றதாக டேவிட் சாலமன், ராபின்சன் சாலமன், பரணபாஸ் வசந்தகுமார் ,ஆர்.ஏ.பிரபாகரன் , அவரது மகன் நிஷாந்த், ராமமூர்த்தி என்பவரின் மனைவி கிரேஸ் ,ராஜா சுகுமார் மற்றும் ஜோஸ்வா நைட் ஆகிய எட்டு பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர்