கோவை கலெக்டரிடம் புகார்!

கோவை,
கோவை மாவட்ட கலெக்டரிடம் லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயலாளர் பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சிக்குட்பட்ட கணபதி – சரவணம்பட்டி மெயின் ரோட்டில் “கோவை ENT” என்ற பெயரில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மையம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையை டாக்டர் சஜீவ் ரங்கசாமி என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு கோவை மாநகராட்சியிடமோ அல்லது நகர் ஊரமைப்புத் துறையிடமோ (DTCP) முறையான எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை . மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கடந்த 2011-ம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில், கடந்த 13 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமலேயே இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடம் (Parking Area), பிற வணிகப் பயன்பாட்டிற்கு சட்டவிரோதமாக வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை பிரதான சாலையிலேயே நிறுத்திச் செல்கின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அனுமதியில்லாத கட்டிடங்கள் மற்றும் விதிமீறல் கட்டிடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக உயர் மட்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சமீபத்தில் (W.P.No.12175 of 2018) உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு அரசாணையும் (G.O. 15) வெளியிட்டது. ஆனால், இந்த விதிகள் எதையும் பின்பற்றாமல் ‘தமிழ்நாடு கிளினிக்கல் எஸ்டாபிளிஷ்மென்ட் ஆக்ட்’ (Tamilnadu Clinical Establishment Act) நடைமுறைகளையும் மீறி இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

மேலும் மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் சஜீவ் ரங்கசாமி மீது ஏற்கனவே தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
எனவே, பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும், சட்ட விதிகளை மதிக்காமலும் செயல்படும் இந்த மருத்துவமனை மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
