கோவை,
பட்டுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் என்ற சங்கமானது கடந்த 1957-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த 1972ம் ஆண்டு சங்கத்தின் நிறுவனர் பால்சாண்டகிரன் இறந்ததைத் தொடர்ந்து சுவன் சாண்டகிரன் கடந்த 1974 வரை தலைவராக செயல்பட்ட பின்பு அவரது சொந்த ஊரான சுவீடன் நாட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகு தலைவராக இருந்த பாதிரியார் தர்மராஜ் திருச்சிக்கு 1984 ஆம் ஆண்டு தலைமையகத்தை மாற்றினார். தற்போது ஆபிரகாம் தாஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பிற்கு பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இந்த அமைப்பின் சார்பில் தேவாலயங்கள் ,கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சங்கத்திற்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாத கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த கமலேஸ்வரன் (43) என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் இருந்து கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் அலுவலகத்தில் இருந்து 12-11-2016ம் தேதி ஒரு கடிதம் வந்ததாகவும் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் சங்கத்திற்கு தலைவராக நியமித்து இருப்பதாகவும் அதனடிப்படையில் திருச்சி மாவட்ட பதிவாளரிடம் ஜெர்மனியில் இருந்து தனக்கு வந்ததாக மூன்று போலி கடிதங்களை தாக்கல் செய்தார். அதே சமயத்தில் கமலேஸ்வரன் கோவை தொண்டாமுத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 18-10-2016 அன்று கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் பெயரில் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து செயல்பட ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழகம் முழுவதும் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் பெயரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு தான் பொறுப்பாளர் என கமலேஸ்வரன் அறிவித்து கொண்டார். பின்னர் அந்த சொத்துக்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்தார். அந்த ஆவணங்களை வைத்து தமிழகம் முழுவதும் பலரிடமும் பல கோடி ரூபாய் பணத்தை முன் பணமாக பெற்று அந்த சொத்துக்களை கிரையம் செய்து தருவதாக மோசடி செய்து வந்தார். கோவை போத்தனூர் பகுதியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4.36 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக ஆபிரகாம் தாஸிடம் கோவையைச் சேர்ந்த முஜிப் ரகுமான் என்பவர் ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்கிடையே கடந்த ஆண்டு சாந்தமூர்த்தி உள்ளிட்டோருக்கு அந்த இடத்தை கமலேஸ்வரன் போலியான பட்டாவை தயாரித்து விற்க முயன்றார். அந்த நிலத்தை நிர்வகித்து வரும் தேவாலய நிர்வாகிகளின் தலைவரும் ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பால்வசந்தகுமார் உத்தரவுப்படி போத்தனூர் தேவாலய நிர்வாகிகள் இது குறித்து போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர் .புகாரின் பேரில் போலீசார் கமலேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல கொடைக்கானலில் உள்ள நிலம், தேனி மாவட்டம் மேல கூடலூர் மற்றும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சொத்துக்களையும் போலி ஆவணங்கள் மூலம் விற்க முயன்றார். இது குறித்து புகார் அளிக்கப்பட்டு கமலேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கமலேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் போலியாக தயாரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் சீல்கள், ஆவணங்கள் மூலம் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் சொத்துக்களை விற்க முயற்சி செய்து வந்தனர். இதற்கிடையே கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசனுக்கு சொந்தமான கோவை இஸ்மாயில் ராவுத்தர் வீதியில் உள்ள இடத்தை வாங்குவதற்காக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் சங்கத்தின் உண்மையான பொறுப்பாளரான ஆபிரகாம்தாசிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார். மேலும் இந்த இடத்தை திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை சேர்ந்த பூபதி என்பவருக்கு விற்க ரஜினிகாந்த் முடிவு செய்தார். இந்தசூழலில் கமலேஸ்வரன் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வின்சென்ட் வினோத்குமார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து இஸ்மாயில் ராவுத்தர் வீதியில் உள்ள இடத்திற்கு 20 லட்ச ரூபாய் பணத்தை ரமேஷ் மற்றும் ஜெயக்குமாரிடம் இருந்து பெற்றதாக போலி ஆவணங்களை பதிவு செய்தனர். இது பற்றிய தகவல் அறிந்த பூபதி உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர் . தொடர்ந்து பூபதி கோவை மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய கோவை மாவட்ட பதிவாளர் கமலேஸ்வரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரிய வந்தது. ஜெர்மனியில் இருந்து வந்ததாக தயாரித்த போலி கடிதங்கள் மூலம் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து பூபதி கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார் .புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை விற்க முயன்ற கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் கமலேஸ்வரன் (43) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது முக்கிய கூட்டாளியான நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வின்சென்ட் வினோத்குமார், மற்றும் முகுந்தன் ,ரமேஷ் ,ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த மோசடி கும்பலிடம் இருந்து சொத்துக்களை வாங்காமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.