கோவை,
கோவையில் அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமறைவாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை விளாங்குறிச்சி – கொடிசியா அருகே பிஎஸ்ஜி குழுமத்துக்குச் சொந்தமான பூர்வீக நிலம் இருக்கிறது. இந்த நிலையில் நிலச் சீர்திருத்தச் சட்டத்தின்கீழ் பிஎஸ்ஜி நிறுவனர் கங்கா நாயுடு என்பவரின் மகன் கோவிந்தராஜ் நாயக்கரிடமிருந்து 45.82 ஏக்கர் மதிப்பிலான நிலத்தை, உபரிநிலம் என அறிவித்தனர். தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிசெய்திருந்தது.
இதற்கிடையே கோவிந்தராஜின் வாரிசுகள் சிவக்குமார், பாலாஜி மற்றும் க்ரீன் வேல்யூ ஷெல்டர்ஸ் தரப்பில் அந்த நிலத்துக்குத் தங்களது பெயரில் பட்டா வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம் நிலத்தை மீட்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரமன்லால், “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த நிலம் மீட்கப்பட்டு அங்கு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.
ஆனால், மீண்டும் ஆய்வு செய்ததில் அங்கு இப்போதைய சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராம், பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் பல வீடுகளைக் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றனர். அதாவது அரசு நிலத்தை அவர்களின் பெயருக்குச் சட்டவிரோதமாக மாற்றம் செய்திருக்கின்றனர்” என்று கூறினார்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டணி அமைத்து திட்டமிட்டு அரசு நிலங்களை அபகரிப்பதும், விதிமீறல்களில் கட்டுமானம் கட்டுவதும் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. அரசு நிலங்களை அபகரிப்பவர்கள் சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களாக இருக்கின்றனர். இது போன்ற தவறுகளில் ஈடுபடுபவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் தப்ப முடியாது. தவறு செய்தவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றம்
அவர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து அங்கு சட்டவிரோதமாகக் குடியிருப்போரை நான்கு வாரங்களில் அப்புறப்படுத்தி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய சிலர், “1997-ம் ஆண்டே அது உபரிநிலமாக அறிவிக்கப்பட்டு, வருவாய்த்துறை ஆவணங்களிலும் பதிவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கிடையே 2011-ம் ஆண்டு கோவை வடக்கு தாசில்தாரர் மூலம் பிஎஸ்ஜி குழுமத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏ ஜெயராம், பாலாஜி உத்தம ராமசாமி இருவரும் பிசினஸ் பார்ட்னர்கள். 2014-ம் ஆண்டு நிலத்தை வாங்கியிருக்கின்றனர். ஜி.ஜி ரெசிடென்சி பேஸ் 1, பேஸ் 2 என்ற அடிப்படையில் நிலத்தை இரண்டு காலகட்டத்தில் விற்றிருக்கின்றனர். ஆரம்பத்தில் ஒரு சென்ட் ரூ.12 லட்சத்துக்கு விற்றனர்.
கடைசியாக ரூ. 27-28 லட்சத்துக்கு விற்றனர். அந்த நிலத்தின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு ரூ.229 கோடி. 10 சர்வே எண்களில் 8 எண்களில் நிலத்தை மீட்டதற்கான அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. மற்ற பகுதிகளில் எம்.எல்.ஏ ஜெயராம் லேஅவுட் அமைத்து விற்றிருக்கிறார். பாலாஜி உத்தம ராமசாமியும் ஒரு வீடு கட்டியிருக்கிறார். அதனடிப்படையில் அங்கு மொத்தம் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன.
இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.500 கோடி. நிலம் இவர்கள் கைக்கு மாறியபோது அதிமுக-வின் செ.ம.வேலுசாமி மேயராக இருந்தார். அவருக்கு ஜெயராமனுடன் நெருக்கம். அந்தச் செல்வாக்கை வைத்துத்தான் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. 2011-ம் ஆண்டு பட்டா வழங்கியது தவறு என்று கடந்த 2017-ம் ஆண்டு கோவை வடக்கு ஆர்டிஓ உத்தரவிட்டார். இதற்கிடையே 2018-ம் ஆண்டு ராமதுரைமுருகன் கோவை டிஆர்ஓ-வாக இருந்தபோது பட்டா வழங்கியது சரிதான் என உத்தரவிட்டார்.
இது முழுக்க முழுக்க அதிமுக காலகட்டத்தில் நடந்திருக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவு மூலம் ஜெயராம், பாலாஜி ஆகியோருடன் தாசில்தாரர், ஆர்டிஓ, டிஆர்ஓ, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை பாய வாய்ப்பிருக்கிறது” என்றனர்.
இது குறித்து விளக்கம் கேட்க அதிமுக எம்.எல்.ஏ கே.ஆர் ஜெயராம், பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோரைத் தொடர்புகொண்டோம். பாலாஜி எண் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஜெயராமைத் தொடர்புகொண்டபோது எதிர்முனையில் பேசிய அவருடைய மகன், “விரைவில் என் தந்தை பத்திரிகையாளர்களைச் சந்திக்கவிருக்கிறார்” என்று கூறினார்.
ஐகோர்ட் உத்தரவு குறித்த தகவல் வெளியான சமயத்தில் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மாநில தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்தில் பங்கேற்று இருந்தார் .தகவல் அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்து நடை பயணத்தில் இருந்து பாதியில் வெளியேறினார் .இது பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மறுநாள் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாலாஜி உத்தம ராமசாமி கலந்து கொண்டார் .அதன் பிறகு இந்த விவகாரம் சூடு பிடிக்க துவங்கியது. இதை தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நீலகிரிக்கு சுற்றுப்பயணம் சென்றார். அந்த சமயத்தில் கோவை மாவட்ட தலைவரான பாலாஜி உத்தம ராமசாமி மீது அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்ட விவகாரம் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மற்ற கட்சிகளில் உள்ளவர்களின் ஊழல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சமயத்தில் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்ட விவகாரம் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து பாலாஜி உத்தம ராமசாமி நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.