கோவை,
கோவை மதுக்கரை தாலுக்கா அரிசி பாளையம் ஊராட்சி வழுக்குபாறை புதூர் முத்து அவென்யூவை சேர்ந்த பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில் எங்கள் ஊரில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், எங்கள் நகருக்கு வரும் பிரதான சாலையான வழுக்குப்பாறையில் இருந்து மாம்பள்ளி செல்லும் சாலையில் இதன் இணைப்பு சாலையான வழுக்குபாறை புதூர் சாலையில் எங்கள் நகரின் பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் மாணவ மாணவிகள் பள்ளிக்கும், பொதுமக்கள் மருத்துவமனை செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இரண்டு ஆண்டுக்கு முன்பு எங்கள் கோரிக்கையை ஏற்று மயிலேறிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எங்கள் நகருக்கு வரும் பிரதான சாலையை தார் சாலை அமைத்து தருவதாக கூறினார். .தொடர்ந்து எங்கள் நகருக்கு வரும் பிரதான சாலையில் மண்ணை வெட்டி எடுத்து அதன்மேல் மெட்டல் கற்களை நிரப்பி , செம்மண் அடித்து நிரப்பி கொடுத்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் செம்மண் எல்லாம் மழைகாலங்களில் மழை நீரில் அடித்து கரைந்து சென்று விட்டது. தற்போது மெட்டல் கற்கள் பெயர்ந்து அங்கும் இங்குமாகவும், குண்டும் குழியுமாக மிகவும் மோசமான சாலையாக காட்சியளிக்கிறது. இந்த பிரதான சாலையை காரணம் காட்டி பள்ளி வாகனங்கள் எங்கள் நகருக்குள் வருவதில்லை.இதனால் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் மிகவும் சிரமமாக உள்ளது.மேலும் எங்கள் நகரில் 60 வயதிற்க்கு மேற்பட்டோர் அதிகமாக வசித்து வருகிறார்கள்.இவர்களுக்கு ஏதாவது மருத்துவ உதவிக்காக செல்லவேண்டும் என்றால் ஆம்புலன்சோ, ஆட்டோக்களோ இந்த சாலையை காரணம் காட்டி உள்ளே வருவதில்லை. அலுவலகம், பள்ளிக்கு, மருத்துவமனைகளுக்கு மற்றும் பொது காரியங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எங்கள் நகருக்கு சாலை அமைக்க எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.