கோவை,
யோகதா சத்சங்க தியான கேந்திரா சார்பில் கோவை கோ இண்டியா வளாகத்தில் புத்தக வெளியீடு மற்றும் கிரியா யோக தியானம், வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்ற ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.
முன்னதாக சுவாமி அமரானந்தா தலைமையிலான இசைக்குழுவினர் பக்தி கீர்த்தனை பாடல்களை இசைத்தனர். தொடர்ந்து பிரகலானந்தா சுவாமிகள் பேசும்போது யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா ஸ்ரீ ஸ்ரீ பரம ஹம்ஸ யோகானந்தரால் 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்றும் உலகமெங்கிலும் செய்யப்பட்டு வரும் ஆன்மீக பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிஎஸ்ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் யோகா மற்றும் தியானத்திற்கும் நவீன கால அறிவியல் மருத்துவத்திற்கும் எவ்வாறு தொடர்பு உள்ளது என்பது குறித்து பேசினார்.
தொடர்ந்து ராஞ்சி யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா மூத்த சன்னியாசி சுவாமி சுத்தானந்த கிரி பேசியதாவது: அனைவரிடத்திலும் ஒரே இறைவன் தான் உள்ளார். உயர்ந்த நிலையை அடையும் போது, மதபேதங்கள் இருக்காது. அகம், புறம் இரண்டிலும், நாம் யார் என்பதை உணர்ந்தால் உண்மையான வெற்றிகிடைக்கும்.
வாழ்க்கையின் குறிக்கோள் இறைவனின் அன்பை அடைவதாக இருக்க வேண்டும். துன்பம் வரும் போது மட்டுமே இறைவனை தேடுகிறோம். இன்பத்திலும் இறைவனை தேட வேண்டும். சில நேரத்தில் கஷ்டம் வருவதும் நல்லதே. அப்போது தான் எளிதாக இறைவனை அடைய முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, ஸ்ரீ ஸ்ரீ பரம்ஹம்ஸ யோகானந்தரால் எழுதப்பட்ட ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ என்ற நுாலின் பாக்கெட் பதிப்பு வெளியிடப்பட்டது.
நுாலை சுவாமி சுத்தானந்த கிரி வெளியிட, பி.எஸ்.ஜி.,மருத்துவமனை இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் பெற்றுக் கொண்டார்.விழாவில்
யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா கோவை கிளையின் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.