கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் ராஜாராம். தொழிலதிபரான இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 43 சென்ட் இடத்தை காளிஸ்வரன் மற்றும் குமாராசாமி ஆகியோரிடம் இருந்து வாங்கி கணபதி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார். இந்த இடத்திற்கு 100 ஆண்டுகளுக்கு மேல் மூல ஆவணங்கள் ஆடிட்டர் ராஜாராமிடம் உள்ளன. இடத்தை வாங்கிய பின் இடத்தின் உரிமையாளர் ஆடிட்டர் ராஜாராம், கம்பி வேலி அமைத்து இருந்தார் . அதன் பிறகு அவர் சில ஆண்டுகள் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். அந்த சமயத்தில் ஆடிட்டர் ராஜாராமுக்கு சொந்தமான இடத்தை கணபதி அம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து ,சின்னையா, முருகாத்தாள், சி.ராஜு என்கிற ஆறுமுகம், சகுந்தலா, ஶ்ரீமதி ஆகியோர் கடந்த 2005 ஆம் ஆண்டு மோசடியாக ஆவணங்கள் தயார் செய்து ராஜாராமுக்கு சொந்தமான இடத்தை தங்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர். இந்த 43 சென்ட் இடத்தை நாச்சிமுத்து குடும்பத்தினர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பேரில் பாக பிரிவினையும் செய்து கொண்டனர். பின்னர் 43 சென்ட் இடத்தை சி.எம் நகர் என பெயரிட்டு அரசு அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளாக உருவாக்கி மோசடி ஆவணங்கள் மூலம் குறைந்த விலைக்கு மற்றவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இந்தியா திரும்பிய ஆடிட்டர் ராஜாராம் தன்னுடைய தொழில் அபிவிருத்திக்காக தனக்கு சொந்தமான கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 43 சென்ட் இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். அப்போது வில்லங்க சான்று எடுத்து பார்த்த போது தான் தனக்கு சொந்தமான இடத்தை சி.எம் நகர் என பெயரிட்டு மோசடியாக போலி ஆவணம் தயாரித்து அரசு அங்கீகாரம் பெறாமல் மனை பிரிவுகளாக பிரித்து பலருக்கு குறைந்த விலைக்கு விற்று இருப்பது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆடிட்டர் ராஜாராம் கோவை மாநகர நில அபகரிப்பு பிரிவில் கடந்த 2012 ஆம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து தன்னுடைய நிலத்தை அபகரித்தவர்கள் மீது புகார் அளித்தார். இந்த புகார் மனு மீது சி. ராஜு தனது பண பலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் முடக்கி விட்டார். இதனால் மனவேதனை அடைந்த ஆடிட்டர் ராஜாராம் பக்கவாதம் ஏற்பட்டு கைகால் வராமல் இன்று வரை மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இதன் பின்னர் அவருடைய மகன் வெங்கட் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை மாநகர குற்றப்பிரிவு நில அபகரிப்பு சிறப்பு பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் நாச்சிமுத்து , சின்னையா, சி.ராஜு என்கிற ஆறுமுகம், சகுந்தலா, முருகாத்தாள் ,ஸ்ரீமதி ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து ராஜாராம் உடைய 43 சென்ட் இடத்தை மற்றவர்களுக்கு விற்பனை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நாச்சிமுத்து கவுண்டர் ,சின்னைய கவுண்டர் அவரது மனைவி முருகாத்தாள்,சி.ராஜு என்கிற ஆறுமுகம், அவரது மனைவி சகுந்தலா மற்றும் சி.ராஜுவின் மகள் ஸ்ரீமதி ஆகிய ஆறு பேர் மீதும் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி கோவை மாவட்ட பதிவாளரிடம் ஆடிட்டர் ராஜாராம் தரப்பில் மோசடி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டுமென மனு அளிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட பதிவாளர் செந்தமிழ் செல்வன் விரிவான விசாரணை நடத்தினார். அதில் நாச்சிமுத்து கவுண்டர் உட்பட ஆவண பதிவில் உள்ள யாருக்கும் ஆடிட்டர் ராஜாராம் இடத்தின் மீது எந்த விதமான உரிமையும் இல்லை என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்ட பதிவாளர் செந்தமிழ் செல்வன் பிறப்பித்த உத்தரவில் நாச்சிமுத்து உள்ளிட்டோர் மோசடியான ஆவணங்கள் மூலம் ராஜாராமுக்கு சொந்தமான 43 சென்ட் இடத்தை பத்திரப்பதிவு செய்துள்ளனர். மோசடியாக பதிவு செய்யப்பட்ட 15 ஆவணங்களையும் பதிவு சட்டம் 77 ஏ கீழ் ரத்து செய்ய உத்தரவிடுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மோசடி ஆவண பதிவில் தொடர்புடைய ஆவணதாரர்கள், சாட்சிகள் ,பத்திரம் தயாரித்தவர் உட்பட அனைவர் மீதும் பதிவு சட்டம் 82 மற்றும் 83ன்படி கோவை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நீதி மன்ற உத்தரவை பெற்று ஆடிட்டர் ராஜாராம் குடும்பத்தார் தங்களுடைய இடத்திற்கு சென்றனர். அப்போது சி.எம் நகர் பகுதியில் ஆடிட்டர் ராஜாராம் இடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி குடியிருக்கும் சண்முகம் உள்ளிட்டோர் ராஜாராம் குடும்பத்தாரை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். உண்மை நிலவரத்தை ஆடிட்டர் ராஜாராமின் மகன் வெங்கட் உள்ளிட்டோர் விளக்கி கூறினர். தங்களுடைய இடத்தை சி. ராஜு மோசடியாக உங்களுக்கு விற்று விட்டார் என்பது குறித்து விளக்கமாக கூறினர். ஆனாலும் அங்கு கூடியிருந்தவர்கள் தொடர்ந்து ராஜாராமின் மகன் வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் ராஜாராமின் மகன் வெங்கட் மீது சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பொய் புகாரையும் அளித்தனர்.
தொடர்ந்து ராஜாராமின் மகன் வெங்கட் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி இவர்களின் இடத்திற்கு 9 க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் உள்ளே நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ததாகவும்,
ஆடிட்டர் ராஜாராமை உள்ளே நுழையவிடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சண்முகம் உள்ளிட்ட 9 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சி.எம் நகரில் குடியிருப்பவர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை பொது வெளியில் பரப்பி வந்துள்ளனர். ராஜாராமுக்கு சொந்தமான 43 சென்ட் இடத்தை சி .எம். நகர் என்ற பெயரில் சி. ராஜு மற்றும் அவரது குடும்பத்தார் மோசடியான ஆவணங்கள் மூலம் அங்கு குடியிருப்போருக்கு குறைந்த விலைக்கு விற்ற உண்மை அங்கு வீடு கட்டி குடியிருந்து வருவோருக்கு தெரிந்தும் ராஜாராம் மற்றும் அவரது குடும்பத்தாரை அவர்களது இடத்திற்கு செல்ல விடாமல் தடுத்து வருவது வருத்தமான ஒரு விஷயமாகும். உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கையோடு ராஜாராம் குடும்பத்தார் காத்திருக்கின்றனர்….