கோவை கணபதி அடுத்த விளாங்குறிச்சி ரோடு பகுதியில் உள்ள சிஎம் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக தங்களுடைய நிலத்தை அபகரிக்க நினைக்கும் மோசடி பேர்வழி மீது நடவடிக்கை எடுக்க கூறி அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
கோவை, கணபதி, ராமகிருஷ்ணாபுரம் சி.எம் நகரில் 2005 ம் ஆண்டு சுமார் 2.73 ஏக்கர் நிலம், 40க்கும் மேற்பட்ட மனைகளாக பிரிக்கப்பட்டு விற்கப்பட்டது. பலர் இந்த பகுதியில் தங்களுடைய ரிட்டையர்மெண்ட் மற்றும் சேமிப்புப் பணம் கொண்டு, வழக்குரைஞர்களின் ஆலோசனை பெற்று, பத்திரப் பதவு அலுவலகத்திலிருந்து தேவையான நகல்கள், பட்டா, சிட்டா, காலி மனை வரி, இதர வரி ரசீதுகள், 60 வருடங்களுக்கு மேல் வில்லங்க சான்றிதழ் போன்றவைகளை பெற்று, எந்த வித வில்லங்கமும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, மின்சார வசதி, குடிநீர் இணைப்பு, சாலை வசதி, தெரு விளக்கு போன்றவைகள் செய்யப்பட்டுள்ளதா? என்று பார்த்தும், இந்த பகுதிக்கு அருகில் பல வருடங்களாக குடி இருப்பவர்களிடம் விசாரித்தும், நிலம் வாங்கி, வங்கி வீட்டுக் கடனின் உதவியின் மூலம் வீடுகள் கட்டி, மின் இணைப்பு, குடிநீர் வைப்புத் தொகை ஆகியவைகளை முறையாக செலுத்தி இணைப்பு பெற்று, பதினைந்து வருடங்களுக்கு மேலாக வசித்து வந்துக் கொண்டு வருகிறோம்.
நாங்கள் சி.எம். நகரில் எங்கள் பெயரில் பல்வேறு தேதிகளில் தனித்தனியாக சொத்துக்களை வாங்கியுள்ளோம். அதில் சிலர் வீடு கட்டி வசித்துக் கொண்டும் வருகிறோம். சமீபத்தில், எங்கள் பெயரில் உள்ள அனைத்து விற்பனைப் பத்திரங்களையும் ரத்து செய்யக் கோரி, ராஜாராம் என்பவர் புகார் அளித்துள்ளதாக மாவட்டப் பதிவாளரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் கடந்த 2005-ம் ஆண்டு சி.எம்.ராஜூ என்பவர் போலி ஆவணம் உருவாக்கியதாகவும், அதலிருந்து அடுத்தடுத்த ஆவணங்கள் உருவாக்கப்பட்டதாகவும் ராஜாராம் தெரிவித்திருக்கிறார். அவர் காளீஸ்வரன், என்.ஆர்.குமாரசாமி என்பவர்களிடமிருந்து 11.04.1997 அன்று சொத்துக்களை வாங்கியதாகவும், அவர் வாங்கிய சொத்து எங்களுக்குச் சொந்தமான இடத்தில் இருப்பதாகவும் புகார் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டப் பதிவாளர் எங்களுக்கு முழு அவகாசம் வழங்காமல், தீர விசாரிக்காமல், எங்கள் பெயரில் உள்ள விற்பனைப் பத்திரங்களை ரத்து செய்ததோடு மட்டுமின்றி, மூலப் பத்திரத்தையும் ரத்து செய்துள்ளதால், லேஅவுட்டில் உள்ள மற்றவர்களின் பத்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டப் பதிவாளர் 17.02.2023 பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நாங்கள், சென்னைப் பத்திரப்பதிவுபதிவுத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் (ஐஜி) மேல்முறையீடு செய்துள்ளோம். விசாரணை இன்னமும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், ராஜாராமை சார்ந்தவர்கள், பயங்கர ஆயுதங்களுடன் தனது ஆட்களை அனுப்பி, எங்கள் இருப்பிடத்தை, சட்டத்திற்குப் புறம்பாகச் அபகரிக்கும் செயலை செய்து வருகிறார்கள். சமீபத்தில் தான் நாங்கள் காளீஸ்வரன் மற்றும் என்.ஆர்.குமாரசாமிக்கு சொந்தமான 43 சென்ட் நிலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்தோம். ஆனால் இது பற்றி நன்கு தெரிந்தே காளீஸ்வரன் மற்றும் என்.ஆர்.குமாரசாமி திரு ராஜாராமுக்கு 11.04.1997 அன்று நிலத்தை விற்றுள்ளனர்.
ராஜா ராமுக்கு இது பற்றி 2011 ஆம் ஆண்டிலேயே தெரியவந்தும், சிவில் நீதிமன்றத்திற்குச் சென்று தனது சொத்தின் மீது உரிமையை இதுவரை கோரவில்லை. 12 வருடங்களுக்கும் மேலாக இது பற்றி எதுவும் அறியாமல் வாழ்ந்து வரும் எங்களுக்கும் எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது திடீரென்று மாவட்டப் பதிவாளரிடம் ஒரு புகார் அளித்து, அந்த புகாரை மாவட்ட பதிவாளரும் தீர விசாரிக்காமல், துரித வேகத்தில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாவட்டப் பதிவாளர், எங்களுக்குச் சாதகமாக இருந்த விற்பனைப் பத்திரத்தை ரத்து செய்ததோடு மட்டுமின்றி, முந்தைய ஆவணங்களையும் ரத்து செய்துள்ளதால்`, மற்ற ஆவணக்காரர்களின் உரிமைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த லேஅவுட்டில் பல மனைகள் உள்ளது. அவர்களிடம் எந்த கருத்தையும் கேட்காமல், அவர்களுக்கு எதுவும் தெரிவிக்காமல், அவசரஅவசரமாக தன்னிச்சையாக முடிவெடுத்து பத்திரங்களை மாவட்ட பதிவாளர் ரத்து செய்துள்ளார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தை தனது நிலம் என்று மாவட்டப் பதிவாளரிடம் புகார் அளித்துள்ள ராஜாராம், சொத்தின் உண்மையான உரிமையாளர் அல்ல. அதன் மீது எந்த உரிமையும் கோரத் தகுதியற்றவர். இது பற்றி நன்கு தெரிந்திருந்தும், இத்தனை வருடங்களாக வீடு கட்டி குடி இருந்து வரும் சொத்தின் உரிமையாளர்களான எங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் ராஜாராம் தனது செல்வாக்கினை பயன்படுத்தி பலவிதமான இன்னல்களை கொடுத்து வருகிறார். எனவே, சி.எம்.நகரில் உள்ள சொத்துக்களின் உரிமையாளர்களான எங்களை துன்புறுத்த வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். காளீஸ்வரனும், என்.ஆர்.குமாரசாமியும் ராஜா ராமுக்கு சொத்தை விற்ற பொழுது அவருக்கு அதில் எந்தவித உரிமையும் இல்லை என்பதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.
எனவே, ராஜா ராமின் புகார் சட்டத்தின் பார்வையில் நிற்காது. சட்டத்திற்கு முரணான உத்தரவை அமல்படுத்தினால், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் வீதியில் தள்ளப்படுவார்கள். ஆதலால் தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து இத்தனை வருடங்கள் வாழ்ந்து வரும் எங்களுக்கு சொத்தைப் பெறுவதற்கு ஏற்ற வகையில், தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு, கேட்டு கொள்கிறோம். நாங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் அனைத்தையும் இதில் முதலீடு செய்து வாங்கிய ஒரே சொத்து இதுதான். நாங்கள் வீதியில் தள்ளப்பட்டால், எங்கள் குடும்பம் முழுவதும் நடுத்தெருவில் நிற்க வேண்டி வரும். ஆதலால் உங்களிடம் இருந்து நீதியை எதிர்பார்க்கிறோம், என்று அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து அங்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருபவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *