கோவை,
மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான இடம் கோவை கணபதியை அடுத்த விளாங்குறிச்சி சாலையில் இருந்தது.2.23 ஏக்கர் உள்ள இந்த இடத்தை 1984 ஆம் ஆண்டுக்கு முன்பே சிலருக்கு விற்று விட்டார். ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டு மீண்டும் மோசடியான முறையில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு இந்த 2.23 ஏக்கர் இடத்தை மீண்டும் விற்பனை செய்துள்ளார்.
இந்த இடத்தை ஏற்கனவே வாங்கியவர்கள் சிலர் கட்டிடங்களை கட்டியும் ஒரு சிலர் காலியாகவும் வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணன் இந்த இடம் முழுவதும் தனக்கு சொந்தம் என்று கூறி அங்கிருந்தவர்களை மிரட்ட தொடங்கினார். மேலும் அந்த இடத்தை சுற்றிலும் வேலியை அமைத்து தனக்குத்தான் இந்த இடம் சொந்தம் என உரிமை கொண்டாட தொடங்கினார். அந்த இடத்தில் 30க்கும் மேற்பட்ட ரவுடிகளை அமர்த்தி அங்குள்ள உண்மையான இடத்தின் உரிமையாளர்களை தங்கள் இடத்திற்குள் வர முடியாத படி தடுத்து பிரச்சினைகள் செய்து வந்தார் .கடந்த ஆண்டு தொழிலதிபர் ஒருவரை நள்ளிரவில் ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவ வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் பாலகிருஷ்ணன் மற்றும் செல்வ புரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய இருவரும் மீது சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த இடத்தில் ஒரு பகுதியில் உள்ள இடத்தின் உரிமையாளரான சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கோவை மாவட்ட பதிவாளரிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் அளித்திருந்தார் .புகாரில் மோசடியான ஆவணங்கள் மூலம் பாலகிருஷ்ணன் என்பவர் இடத்தை அபகரிக்க முயற்சிக்கிறார் என்றும் பாலகிருஷ்ணன் பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் .இதை தொடர்ந்து கோவை மாவட்ட பதிவாளர் செந்தமிழ் செல்வன் இது குறித்து விரிவாக விசாரணை நடத்தினார். விசாரணையில் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மோசடியான பதிவு மூலம் இந்த இடத்தை அபகரிக்க முயற்சி செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மாவட்ட பதிவாளர் செந்தமிழ் செல்வன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் .அதில் பழனிச்சாமி என்பவர் ஏற்கனவே விற்று விட்ட சொத்தை மீண்டும் பாலகிருஷ்ணனுக்கு கிரயம் செய்து கொடுத்தது சட்டப்படி செல்லாது. மேலும் பாலகிருஷ்ணன் மேற்கொண்ட ஆவண பதிவுகள் மற்றும் சொத்தின் மீது வில்லங்கத்தை உருவாக்கும் விதத்தில் தனது மனைவி மற்றும் மகன் மீது மேற்கொண்ட தான செட்டில்மெண்ட் மற்றும் பொது அதிகார ஆவணங்கள் அனைத்தும் மோசடி ஆவண பதிவுகளே என்றும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 463 மற்றும் 470ன் படி இது மோசடி ஆவணம் ஆகும். மேலும் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ள பாலகிருஷ்ணனின் ஆவணங்களை பதிவு சட்டம் 77 கீழ் ரத்து செய்து உத்தரவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து பாலகிருஷ்ணன் மோசடியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்த பத்திரப்பதிவு ரத்து செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
மோசடியாக பதிவு செய்யப்படும் பத்திர பதிவுகளை அந்தந்த மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் அதிகாரத்தின் கீழ் தற்போது மோசடியாக பதிவு செய்யப்படும் பதிவுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் மோசடி பத்திரப்பதிவுகள் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.