சென்னை: அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில வாரங்களாகவே நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுகளில் ஒரு முறை ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாகவும், இன்னொரு முறை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வெளியான நிலையில் தான் ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை வருகிற 4-ந்தேதி (நாளை மறுநாள்) மீண்டும் நடைபெற உள்ளது. இதுவே இறுதி விசாரணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று தீர்ப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த விசாரணை அரசியல் களத்திலும், அ.தி.மு.க. வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அவரது கையெழுத்திட்ட வரவு செலவு கணக்குகளை அங்கீகரித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட்டது. இதேபோன்று மத்திய அரசு சார்பிலும் 2 முறை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அங்கீகாரமாகவே எடப்பாடி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில்தான் 4-ந்தேதி நடைபெற உள்ள விசாரணை இறுதி விசாரணையாக இருக்கும் என்பதால் யாருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்? யாருடைய கை ஓங்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இருவருமே சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் உள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் அங்கீகாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டும் எங்களைத்தான் அ.தி.மு.க.வாக நிச்சயம் அங்கீகரிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகுந்த தெம்புடன் காத்திருக்கிறார்கள். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவரில் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கும் என்பதே இப்போது எழுந்துள்ள மிகபெரிய கேள்வியாக உள்ளது.